ஷஃபாலி வர்மா: 15 வயதில் இந்திய டி20 அணியில் இடம் பிடித்தது எப்படி?

Sports

ஷஃபாலி வர்மா: 15 வயதில் இந்திய டி20 அணியில் இடம் பிடித்தது எப்படி?

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னால் சச்சின் டெண்டுல்கர், ரோடாக்கிலுள்ள லாக்லி விளையாட்டு மைதானத்தில் ரஞ்சி கிரிக்கெட் போட்டிகளுக்காக வந்தபோது, ஆயிரக்கணக்கான ரசிகர்களின் மத்தியில் ஒருவராக இருந்தார் 10 வயதான ஷஃபாலி வர்மா.

இவருக்குதான் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாட பிபிசிஐ-யிடம் இருந்து தற்போது அழைப்பு வந்தது.

இப்போது 15 வயதாகியிருக்கும் ஷஃபாலி, கிரிக்கெட் பயிற்சி கழகம் இருந்த உள்ளூர் பள்ளிக்கூடத்தில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்தியப் பெண்கள் டி20 அணியில் தனக்கு இடம் கிடைக்குமென அவர் எண்ணியதில்லை. ஆனால், இதற்கான அடித்தளத்தை அவர் பள்ளிக்கூடத்தில்தான் உருவாக்கினார்.

"சச்சின் வந்துபோது, இலவச டிக்கெட் இருந்தபோதும், கிராமப்புறங்களில் இருந்து வந்த மக்கள் கூட்டமாக முண்டியடித்தனர். அந்த கூட்ட நெரிசலிலிருந்து தப்பித்து டிக்கெட் வாங்க அப்பா முயன்றபோது, போலீஸாரின் தடியடியிலிருந்து தப்பிக்க வேண்டியிருந்தது.கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினை ஒரு கணம் பார்க்கத்தான் இதெல்லாம் நிகழ்ந்தது" என்று தெரிவித்தார் இந்த குடும்பத்திலுள்ள மூன்று குழந்தைகளில் மூத்தவரான ஷஃபாலி.

முந்தைய நாட்களை நினைவுகூர்ந்த ஷஃபாலி, "சச்சினின் புகழைப் பார்த்து, கிரிக்கெட் விளையாட்டை விரும்புகிற ஆட்களைத் தேடினேன்" என்கிறார்.

ஹரியானாவில் பொதுவாகக் கபடி, குத்துச்சண்டை மற்றும் மல்யுத்தத்தில் அதிக ஆர்வம் காட்டுவர்.

"கிரிக்கெட் விளையாட்டைத் தொழில்முறையாக தேர்ந்தெடுக்க முடிவு செய்து, கிரிக்கெட் விளையாட்டு வீரரான தனது தந்தையிடம் தோல் பந்து வாங்கி தாருங்கள்" என்று கேட்டதாகத் தெரிவித்தார் ஷஃபாலி.

டென்னிஸ் பந்து கொண்டு முதலில் விளையாடிய ஷஃபாலி, காயம் ஏற்படுத்துகின்ற அல்லது வேகமாகப் பட்டுவிட்டால் எலும்பு முறிவை ஏற்படுத்தும் ஆபத்துக்கான சாத்தியம் இருந்த போதிலும் தோல் பந்து கொண்டு கிரிக்கெட் விளையாட முடிவு செய்தார்.

சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடும் மைதானத்திற்கு அவரது தந்தை ஷஃபாலியை அழைத்து செல்வார். ஆனால், அவர் பெண் என்றும், விளையாடும்போது காயம்படும் என்று கூறி அந்த சிறுவர்கள் ஷஃபாலியை விளையாட்டில் சேர்க்க மறுத்துவிடுவர்.

சிறுவர்கள் தன்னை விளையாட்டுக்குச் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பதை தனக்கு ஏற்பட்ட அவமானமாகக் கருதிய ஷஃபாலி, ஆண்களைப் போல தோற்றமளிக்கத் தனது நீண்ட கூந்தலை வெட்டிவிட்டார்.

பின்னர், மைதானங்களில் விளையாட தொடங்கிய ஷஃபாலி, பையன்களின் கிரிக்கெட் அணியில் ஒருவரானார்.

  • இன்ஸ்டாகிராமை கலக்கும் தெற்காசிய 'பிரவுன் பெண்கள்' - யார் இவர்கள்?
  • உலகம் சுற்றும் பொம்மைகள் - இதயங்களைத் திருடிய பெண்ணின் முயற்சி

அதன் பின்னர் தனது முடிவிலிருந்து பின்வாங்காத அவருக்கு, அவரது தந்தையே பயிற்சியாளராக கிரிக்கெட் விளையாட்டைச் சொல்லிக் கொடுத்தார்.

ஷாஃபாலி கிரிக்கெட் விளையாட கற்றுக்கொள்வது அவருக்கு எந்த பலனையும் தராது என்று பள்ளி நண்பர்களும், உறவினர்களும் அவரிடம் கூறினார்.

"இந்த விமர்சனங்களை எல்லாம் தாண்டி, பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னிலை வீராங்கனைகள் மித்தாலி ராஜ் மற்றும் ஹர்மான்பிரீத் கவுர் ஆகியோரின் பெயர்களைச் சொல்லி கொள்வேன். பிற பெண்களால் முடியும் என்றால் என்னால் ஏன் முடியாது என்று கூறி எனது நண்பர்களை வாயடைத்துப் போகச் செய்வேன்" என்கிறார் ஷஃபாலி.

சில விளையாட்டு வீரர்களின் பெயர்களை எடுத்துச் சொல்லி அவர்களைப் போல மல்யுத்தம், குத்துச்சண்டை விளையாட்டில் சேர்ந்து கொள்ள ஷஃபாலிக்கு தெரிந்தவர்கள் எப்போதும் சொல்வதுண்டு. ஆனால், இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியில் தான் சச்சின் டெண்டுல்கர் போல ஜொலிக்க வேண்டுமென ஷஃபாலி தெரிவித்து விடுவார்.

கிரிகெட் விளையாட்டில் மகள் அதிக ஆர்வம் காட்டியது இந்த நிலைக்கு அவரை கொண்டு சேர்க்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்கிறார் ஷஃபாலியின் தந்தை சன்ஜீவ் வர்மா.

அவர் நடத்தி வந்த சிறியதொரு ஆபரணக்கடையில் இருந்து கிடைத்த சிறு சேமிப்பையும் மகளின் கிரிக்கெட் ஆசையை நிறைவேற்றுவதற்குச் செலவிட்டார்.

"ஹரியானாவில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால், பெண்கள் கிரிக்கெட் விளையாடுவது இல்லை என்பதால், எனது மகளைப் பையன்கள் விளையாடும் இடத்திற்கு நான் அழைத்துச் செல்வேன். இப்போதும் பெண்கள் கிரிக்கெட் விளையாடுவது மிகவும் குறைவுதான். தான் கிரிக்கெட் விளையாட விரும்புவதை பையன்கள் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதாலும், கிரிக்கெட் விளையாடத் தடையாக இருக்கிறது என்பதாலும் தனது நீண்ட தலைமுடியை வெட்டிவிட வேண்டுமென மகள் வலியுறுத்தத் தொடங்கினார்" என்கிறார் வர்மா.

"சில மாத பயிற்சியிலேயே மட்டையைச் சரியாகப் பிடித்து ஆட கற்றுக்கொண்டு, விளையாடும்போது தொடக்க வீராங்கனையாகக் களமிறக்க வேண்டுமெனக் கேட்கத் தொடங்கிவிட்டார்" என்று அவர் தெரிவித்தார்.