ஒரு பாதுகாப்பான நாட்டை நாங்கள் உருவாக்குவோம் - KinniyaNews

ஒரு பாதுகாப்பான நாட்டை நாங்கள் உருவாக்குவோம் - KinniyaNews

இலங்கை இராணுவத்தை மக்களை கொல்வதற்கும், அச்சுறுத்துவதற்கும் பயன்படுத்தாமல் ஒரு பாதுகாப்பான நாட்டை நாங்கள் உருவாக்குவோம். எங்கள் ஆட்சியில் தண்ணீர் கேட்டவா்களுக்கும், ஈ.பி.எவ் கேட்டவா்களுக்கும், மண்ணெண்ணெய் கேட்டவா்களுக்கும் துப்பாக்கியினால் பதிலளிக்க மாட்டோம் என அமைச்சா் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளா் சஜித் பிரேமதாஸவை ஆதரித்து நல்லூர் சங்கிலியன் பூங்கா வளாகத்தில் நேற்று (08) மாலை நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

கோட்டாபய ராஜபக்சவிடம் பணத்தை வாங்கிக் கொண்டு தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிப்பதற்கு பலா் இங்கே முயற்சிக்கின்றனர். அவா்கள் தொடா்பில் மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும். மக்கள் உங்கள் வாக்குகளை எங்களுக்கு வழங்கவேண்டும்.

பாதைகளை அமைத்துக் கொடுத்து அதிலிருந்து கொமிஸன் பணத்தை எடுத்ததுதான் ராஜபக்ஷக்கள் செய்த காரியம். ஆனால் சஜித் பிரேமதாஸவின் ஆட்சியில் அவ்வாறானதொரு நிலை இருக்காது. விவசாயம், கடற்றொழில் மேம்பாடு, கல்வி மற்றும் அடிப்படை தேவைகள் நினைவேற்றப்படும். நாங்கள் பொய்களை கூற விரும்வில்லை. செய்ய முடிந்தவற்றையே கூற விரும்புகிறோம்.

போரினால் பாதிக்கப்பட்ட ஒருவனாக ஒரு நாட்டில் அமைதியான வாழ்க்கையை நான் விரும்புகிறேன். என்னை தன்னுடைய ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சை பொறுப்பேற்கும் படி சஜித் கூறியுள்ளார். நான் பாதுகாப்பு அமைச்சை பொறுப்பேற்றால் நாட்டில் உள்ள சகலரையும் ஒன்றிணைப்பேன்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்களை ஒத்த தாக்குதல்கள் இடம்பெறாது. இராணுவம் மக்களை கொல்வதற்கும், மக்களை அச்சுறுத்துவதற்கும் பயன்படுத்தப்படாது. தண்ணீா் கேட்பவா்களுக்கும், ஈ.பி.எவ் கேட்பவா்களுக்கும், மண்ணெண்ணெய் கேட்பவா்களுக்கும் துப்பாக்கியால் பதிலளிக்கப்படாது என்றார்.
 

-யாழ். நிருபர் பிரதீபன்-