புற்று நோயை ஏற்படுத்தும் காய்ந்த மிளகாய் 200 மெட்றிக் டொன் இறக்குமதி.. பொதுமக்களுக்கு எச்சரிக்கை.

இலங்கை

புற்று நோயை ஏற்படுத்தும் காய்ந்த மிளகாய் 200 மெட்றிக் டொன் இறக்குமதி.. பொதுமக்களுக்கு எச்சரிக்கை.

ஆபத்தை விளைவிக்கக்கூடிய வகையில் முப்பது சதவீதத்திற்கும் 

அதிகளவான எஸ்லடொக்சின் என்ற பதார்த்தம் அடங்கிய காய்ந்த மிளகாய்கள் இலங்கையில் சந்தைப் படுத்தப்பட்டுள்ளதாக  தெரியவருகிறது.

இது தொடர்பில் விழிப்புடன் செயற்படுமாறு அவசர எச்சரிக்கையொன்று பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த காய்ந்த மிளகாய்களுக்கு மேற்கொள்ளப்பட்ட இரசாயனப் பகுப்பாய்வில் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய இரசாயனம் அடங்கியுள்ளமை தெரியவந்துள்ளதாக சுற்றாடல் தொழிற்துறை மற்றும் சுகாதார பாதுகாப்பு பணிமனையின் உணவு பிரிவிற்கு பொறுப்பான விசேட வைத்திய அதிகாரி சப்புமல் தனபால தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சுங்கத் திணைக்களத்தின் பேச்சாளரொருவர் கூறுகையில்,

இந்தியாவிலிருந்து 16 இறக்குமதியாளர்களால் இவ்வாறான ஆபத்தை விளைவிக்கக்கூடிய 200 மெட்றிக் டொன் காய்ந்த மிளகாய்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு எதிராக சுங்க வழக்கினை பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படுகின்ற உணவுப் பொருட்கள் இரசாயனப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு அதன் அறிக்கை கிடைக்கும் வரையில் அவற்றை தனியார் களஞ்சியசாலைகளில் களஞ்சியப்படுத்த கடுமையான நிபந்தனைகளுடன் சுங்கத் திணைக்களம் அனுமதியளிக்கிறது.

இந்த பகுப்பாய்வு அறிக்கை கிடைக்கப்பெறும் வரையில் குறித்த உணவுப்பொருட்களை சந்தைப்படுத்த முடியாது என்ற போதும் இந்த நிபந்தனையை மீறி காய்ந்த மிளகாய்கள் சந்தைப்படுத்தப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இது தொடர்பில் உடனடி நடவடிக்கைகளையும், விசேட பரிசோதனைகளையும் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகிந்த பாலசூரிய குறிப்பிட்டுள்ளார்.