சஜித்தின் தெரிவின் பின்னர் கோட்டாவின் செல்வாக்கு நாளுக்கு நாள் சரிந்து வருகிறது.. அந்த கட்சி அரசியல்வாதிகள் நிலை தடுமாறியுள்ளனர்.
Lanka
சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி வேட்பாளரானதன் பின்னர், பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபாய
ராஜபக்ஷவின் செல்வாக்கு குறைவடைந்து வருவதாகவும் அதனால் அந்த கட்சியின் அரசியல்வாதிகள் நிலை தடுமாறியுள்ளதாகவும் தேசிய ஐக்கிய முன்னனியின் தலைவர் ஆஸாத் சாலி தெரிவித்தார்.
கொழும்பு, நாவலவில் இன்று (01) காலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த அவர்,
ஐக்கிய தேசிய கட்சி தனது வேட்பாளரை தெரிவு செய்வதில் இவ்வளவு காலம் சென்றதுக்கு காரணம் அக்கட்சி ஜனாநாயக நடைமுறையை பேணியமையாகும். சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்று அக்கட்சியின் ஆதரவாளர்களும் நாட்டிலுள்ள அநேகமான மக்களும் முதலில் அழுத்தம் கொடுத்தனர்.
அதேபோன்று, ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதிப்படுத்தும் உள்ளுராட்சி உறுப்பினர்கள் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் அக்கட்சியின் உயர்மட்ட பிரமுகர்கள் வெகுவாக அழுத்தம் கொடுத்தனர். கட்சியின் மத்திய குழு, செயற்குழு பலமுறை கூடி இது தொடர்பில் ஆராய்ந்து மனம்விட்டு பேசி ஒத்துமையான பொதுவான முடிவுக்கு வந்தனர். சஜித் பிரேமாதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பது என ஏகோபித்த முடிவை பிரதமர் ரணில் விக்ரமசிங்க செயற்குழுவிலும் பாராளுமன்ற குழுவிலும் அறிவித்தார். இதுதான் ஜனநாயக கட்சி ஒன்றின் நடைமுறையாகும்.
இதற்கு மாற்றமாக பொதுஜன பெரமுன முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சாப்பாட்டு மேசையில் குடும்ப உறுப்பினர்கள் அமர்ந்துகொண்டு கோத்தாபாயவை வேட்பாளராக தெரிவு செய்தனர். அமெரிக்க பிரஜை ஒருவரை வேட்பாளராக தெரிவு செய்துவிட்டு அவர்கள் இப்போது தடுமாறி வருகின்றனர்.
இலங்கை பிரஜாவுரிமையை கோத்தாபாய பெற்றுக்கொள்வதிலும் பல ஆவண மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டு வருகின்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அமைச்சின் கீழ் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தை கையகப்படுத்தி இரவோடு இரவாக அவருக்கு குடியுரிமை வழங்கப்பட்ட விடயம் இப்போது தெரியவந்துள்ளது.
கோட்டாபாய ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிட முடியாமல் போய்விட்டால் அவரது சகோதரர் சமல் ராஜபக்ஷவை வேட்பாளராக நிறுவத்துவதை இவர்களின் திட்டம் என்றும் தெரிவித்தார்.