இலங்கையில் கொரோனா வைரஸால் உயிரிழந்த 2வது நபர் குறித்து வெளியாகிய சில தகவல்கள்

இலங்கையில் கொரோனா வைரஸால் உயிரிழந்த 2வது நபர் குறித்து வெளியாகிய சில தகவல்கள்

இலங்கையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்ற நிலையில், வைரஸ் தொற்றுக்கு இலக்கான மற்றும் ஒருவர் இன்று உயிரிழந்தார்.

இதனால் கொரோனா வைரஸ் தொற்றினால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதகரித்துள்ளது. அத்துடன், 122 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், உயிரிழந்த இரண்டாம் நபர் குறித்த சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த வகையில், உயிரிழந்த நபர் நீர்கொழும்பு – போருதொடை பகுதியைச் சேர்ந்த 64 வயதானவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இவர் கடந்த 8ம் திகதி சுப நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணம் சென்று வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, அவருக்கு சுகவீனம் ஏற்பட்டிருந்ததாவும், அதேபகுதியில் உள்ள வைத்தியர்களிடம் சென்று சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையிலேயே, நேற்றைய தினம் திடீர் சுகயீனம் ஏற்பட்டதை தொடர்ந்து நீர்கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் மீது ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து, அவர் தனியார் வைத்தியசாலையிலிருந்து நீர்கொழும்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றுக்கான பரிசோதனைகளை வைத்தியர்கள் மேற்கொண்டுள்ளனர்.

இதன்படி, கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையிலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபரின் குடும்பத்தில் 11 உறுப்பினர்கள் இருப்பதாகவும், அவர்கள் அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்படுகின்றது.