5 தமிழ் கட்சிகளும் தமிழ் சமூகத்தை ஏமாற்றியுள்ளதாக பல்கலை மாணவர்கள் குற்றச்சாட்டு - KinniyaNews

5 தமிழ் கட்சிகளும் தமிழ் சமூகத்தை ஏமாற்றியுள்ளதாக பல்கலை மாணவர்கள் குற்றச்சாட்டு - KinniyaNews

ஐனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழர் தரப்பின் நிலைப்பாடாக தயாரிக்கப்பட்ட பொது ஆவணத்தின் 13 கோரிக்கைகளையும் பிரதான வேட்பாளர்களிடம் கொண்டு சேர்க்காமல் மாணவர்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தையுமே இந்த ஐந்து கட்சிகளும் ஏமாற்றியுள்ளதாக குற்றஞ்சாட்டியிருக்கும் பல்கலைக்கழக மாணவர்கள் இந்த ஐந்து கட்சிகளும் தாம் தயாரித்த பொது ஆவணக் கோரிக்கைகளை தாமே உதாசீனம் செய்து கூட்டு முயற்சியையும் குழப்பியுள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.

தமிழர் தரப்பின் ஒற்றுமைக்காக மாணவர்களாகிய நாங்கள் எடுத்த இந்த முயற்சியை தத்தமது அரசியலுக்காக முந்திக் கொண்டு அறிக்கைகளை வெளியிட்டும் தமது நிலைப்பாடுகளை அறிவித்தும் எல்லாவற்றையும் குழப்பியடித்து அனைவரையும் ஏமாற்றி முட்டாள்களாக்கி உள்ளதாகவும் தெரிவித்திருக்கும் மாணவர்கள் இவர்களுக்கு மக்கள் சரியான பாடத்தைப் புகட்ட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர்.

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அறையில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் மேற்கண்டவாறு தெரிவித்தனர். இவ்விடயம் குறித்து அவர்கள் மேலும் தெரிவித்ததாவது..

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர் சார்பாக ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்க வேண்மென்ற கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் முயற்சியின் காரணமாக தமிழர் பரப்பிலுள்ள தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒரே மேசைக்கு அழைக்கப்பட்டு பேச்சுக்கள் இடம்பெற்றிருந்தன.

இந்த நடவடிக்கையை நாங்கள் மேற்கொண்ட போது இதை விளம்பரப்படுத்தாமல் இது வெற்றியளிக்கிற வகையில் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டுமென்ற நிலைப்பாட்டை தான் நாங்கள் எடுத்திருந்தோம்.

ஆனால் ஊடகங்கள் வாயிலாக கட்சிகள் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் நாங்கள் எடுத்த இந்த முயற்சியானது தேவையில்லாத முயற்சி, சிறுவர்களின் வீண் முயற்சி என்பது குறித்தான விமர்சனங்களை நாங்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் இதை நாம் எமக்கான தோல்வியாகப் பார்க்கவில்லை என்பதையும் நாங்கள் தெளிவாக சொல்கிறோம். அதாவது தமிழ் மக்களுக்காக நாங்கள் எடுத்த நல்லதோர் முயற்சியாகவே இதனைப் பார்க்கிறோம். அதாவது தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள ஒவ்வொரு கட்சிகளும் வருகின்ற ஐனாதிபதித் தேர்தலை எவ்வாறான முறையில் அணுகுவது என்பது தொடர்பாக ஒவ்வொருவரும் மாறுபட்ட அணுகுமுறையைக் கொண்டிருந்த நிலையில் தமிழர் சார்பாக பலமான குரலாக அல்லது ஒருமித்த குரலாக இருக்க வேண்டுமென்பதன் பிரகாரம் அனைத்துக் கட்சிகளையும் ஒரு மேசைக்கு நாம் அழைத்திருந்தோம்.

இந்நிலையில் ஒவ்வொரு கட்சிகளிடமிருந்தும் பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் இந்த 13 கோரிக்கைகள் அடங்கிய பொது ஆவணம் தயாரிக்கப்பட்டன.

இந்த கோரிக்கைகைள ஆறு கட்சிகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

அதே நேரம் ஒரு விடயத்தை இன்னும் மேலதிகமாக சேர்க்க வேண்டுமென்ற விடயத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரியிருந்த நிலையில் அந்தக் கோரிக்கை ஏற்கப்படாததால் அதிலிருந்து அவர்கள் விலகினர்.

இதனையடுத்து இந்த ஐந்து கட்சிகள் அதில் ஒப்பமிட்டு இந்தக் கோரிக்கைய தயார் செய்யப்பட்டு 13 கோரிக்கைகளும் இறுதி ஆவணமாக வெளியிடப்பட்டிருந்தது.

அத்தோடு இந்தக் கோரிக்கைகளை பிரதான வேட்பாளர்களிடம் முன்வைத்து அவர்கள் இதனை ஏற்கின்ற பட்சத்தில் தான் அவர்களுக்கு நாம் ஆதரவை அளிப்பதாகவும் இல்லாது போகின்ற பட்சத்தில் அனைவரும் இணைந்த வேறுமுறையான அணுகுமுறையை முன்வைப்பதாகவும் ஏற்றுக் கொண்டு தான் இதில் இக் கட்சிகளால் கையெழுத்திடப்பட்டிருந்தது.

ஆனால் அதன் பின்னராக இந்த ஐந்து கட்சிகளும் 13 கோரிக்கைகளை முன்வைத்து எந்த வேட்பாளரிடமும் கதைக்கவில்லை என்பது உண்மை. இதில் கூட்டமைப்பினரைப் பொறுத்தவரையில் இங்குள்ள ஊடகங்களுக்கு ஒன்றையும் தெற்கு ஊடகங்களுக்கு இன்னொன்றை சொல்கின்றனர்.

அதாவது இந்தக் கோரிக்கைகள் தொடர்பில் யாருடனும் கதைக்கவில்லை என தெற்கில் அவர்களே சொல்கின்றனர்.

இவர்களது இத்தகைய செயற்பாடுகளென்பது பல்கலைக்கழக மாணவர்களை மாத்திரமின்றி அனைத்து தமிழ் மக்களையும் முட்டாள் ஆக்குகின்ற செயற்பாடாகத் தான் இதனை நாங்கள் பார்க்கிறோம்.

அதாவது இந்த 13 அம்சக் கோரிக்கைகள் என்ற விடயம் எழுதிக் கொண்டிருக்கும் போதே இதனை எந்த வேட்பாளர்களும் ஆதரிக்க மாட்டார்கள் என்ற கருத்து அவர்களிடத்தே இருந்த போது அவர்கள் அணுகுமுறை தொடர்பான தெளிவான நிலைப்பாட்டை எம்மிடம் அவர்கள் கூறவில்லை.

இந்தக் கோரிக்கைகள் என்ற விசயத்திற்கு முன்பாக அணுகுமுறை என்ற விடயத்தில் ஒருமித்து நிற்க வேண்டுமென்று கேட்டிருந்தோம். ஆனால் அவ்வாறு யாரையும் ஆதரிப்பதில்லை. இதில் அணுகுமுறை என்ற வியடயத்தில் சரியாக ஒரு பாடத்தை படிப்பிப்போம் என்று பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியிருந்தார். அவ்வாறு அவர்களால் வாக்குறுதி வழங்கித் தான் இந்தக் கோரிக்கை எழுதப்பட்டிருந்தது.

ஆக கோரிக்கைகளில் ஒன்றுபட்ட ஐந்து கட்சிகளும் அணுகுமுறை என்ற விடயத்தில் தவறியிருக்கிறது. அதாவது இந்த விடயத்தில் ஐந்து கட்சிகளில் முதலாவதாக தமிழ் மக்கள் கூட்டணியின் விக்னேஸ்வரன் முந்திக் கொண்டு அறிக்கையை வெளியிட்டார். அவர் வெளியிட்ட அந்த அறிக்கையில் எந்த வேட்பாளரையும் ஆதரிப்பதாக கூறாமலிருந்தாலும் ஒரு கூட்டு முயற்சி நடக்கின்ற போது முந்திக் கொண்டு சொன்னதை தவறாக பார்க்கிறோம்.

இதற்கு அடுத்ததாகவும் ஒரு கூட்டம் இடம்பெற்றிருந்த நிலையில் தபால் மூல வாக்களிப்பு நடைபெறவுள்ளதால் முடிவு சொல்ல வேண்டுமென்ற நிலைமை இருந்தது. ஆனாலும் சஜித் பிரேமதாசாவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளிவந்த பின்னர் முடிவை அறிவிப்பதாகவும் இந்த தபால் மூல வாக்களிப்பில் மக்களை வாக்கு போட வேண்டுமென்று தெளிவுபடுத்துவதாகவும் முடிவெடுக்கப்பட்டது.

அதுவும் இந்த முடிவு குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவரது கைப்பட எழுதிய அறிக்கையையே நாங்கள் அந்தக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு தெரியப்படுத்தியிருந்தோம்.

ஆனால் அதன் பின்னராக இந்த ஐந்து கட்சிகளுடனோ அல்லது மாணவர்களுடனோ எதனையும் கேட்டுக் கொள்ளாமல் அல்லது எதனையும் தெரிவிக்காமல் தமிழரசுக் கட்சி தாமாகவே முடிவெடுத்து ஒரு வேட்பாளரை சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள். அதே போன்று ஏனைய கட்சிகளும் தமது நிலைப்பாடுகளை அறிவித்துள்ளார்கள். ஆனால் இங்கு தயாரிக்கப்பட்ட ஆவணத்தின் பிரகாரம் 13 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதும் அதனை விட்டுவிட்டே இந்த முடிவை எடுத்திருக்கின்றார்கள்.  

அந்த கோரிக்கையில் உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய விடயம் தாம் சொல்கின்ற ஐனாதிபதி மூன்று மாதத்தில் தீர்த்து தர வேண்டுமென்று இருக்கிறது. ஆக அவர்கள் அந்த விடயத்தில் உடன்பட்டுத் தான் அவ்வாறு ஒருவருக்கு கைகாட்டியிருப்பார்கள் என்று தான் நினைக்கிறோம்.

ஏனெனில் இந்த 13 அம்சக் கோரிக்கைளையும் தான் நாங்கள் கதைத்திருக்கிறோம் என்றும் சொல்கிறார்கள். ஆனால் தேர்தல் விஞ்ஞாபனங்களில் அவ்வாறான வலுவான அதாவது 13 அம்சக் கோரிக்கையிலும் வலுத்த ஒரு காரணமும் அங்கு சுட்டிக்காட்டப்படவில்லை. அப்படியாயின் இதில் உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள் உள்ளடங்கின்றதா என்ற கேள்வி இருக்கிறது.

ஐனாதிபதி தேர்தல் முடிவைடைந்த மூன்று மாதத்தின் பின்னர் தான் நடாளுமன்றத் தேர்தல் வரும். ஆகவே இப்படி ஒருவரை நேரடியாக சுட்டிக்காட்டியவர்கள் இதனைத் தீர்த்து தர வேண்டும். அப்படி இல்லாவிட்டால் மக்கள் தெளிவாக இருக்க வேண்டும். இவர்களுக்கு நல்லதோர் பாடத்தைப் புகட்ட வேண்டும். ஏனெனில் எவர் ஐனாதிபதியாக வந்தாலும் தமிழ் மக்கள் சார்பாக சரியான நிலைப்பாட்டை எடுப்பார்களோ தெரியவில்லை.

ஆனால் தமிழ்ப் பிரதிநிதிகள் சரியானவர்களாக அமைய வேண்டும். ஏனென்றால் இந்தக் கோரிக்கைகளையே முன்வைத்து ஒரு தீர்மானம் எடுப்பதாக இருந்த நிலையில் அதனைக் கைவிட்டு தாமாகவே அவர்கள் தீர்மானங்களை எடுத்திருப்பதானது எங்களை மட்டுமல்ல அனைவரையும் முட்டாளாக்கியுள்ளதாகவே பார்க்கிறோம்.

தமிழ் மக்கள் சார்பாக ஒருமித்த கோரிக்கையை முன்வைத்து அதற்கமைய தீர்மானம் எடுப்பதென்ற கூட்டு முயற்சி எடுத்த எங்களுக்கு ஒரு தகவலும் சொல்லாமல் தாமாகவே அவர்கள் அறிக்கை விட்டுள்னனர். இது தொடர்பாக திரும்பவும் கூட்டம் நடக்கவிருந்த நிலையில் அந்தக் கூட்டத்திற்கும் எவரும் உரிய பதிலை வழங்கவில்லை. இது தவறான செயற்பாடாகவே பார்க்கிறோம். மேலும் கூட்டு முயற்சி ஒருமித்த தீர்மானம் என்று சொல்லிவிட்டு தாம் தாம் தனியாக தீர்மானங்களை எடுத்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. ஆக இந்த தேர்தலில் இவர்கள் இவ்வளவு அவசரமாக சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை என மேலும் தெரிவித்தனர்.

(யாழ். நிருபர் பிரதீபன்)