சாட்சியம் கூறுவது ஒரு முஸ்லிமின் கடமை எனவே வாக்களியுங்கள் - KinniyaNews.com
'வாக்களித்தல் என்பது சாட்சியம் கூறுதல்; சாட்சியம் கூறுவது ஒரு முஸ்லிமின் கடமை; எனவே வாக்களியுங்கள்', என்று சிலர் கூறுகின்றார்கள். இக்கூற்று தவறானது.
சாட்சியமளித்தல் வேறு; தீர்ப்பளித்தல் வேறு.
சாட்சியமளிக்கின்ற ஒருவர் தன் கண்களால் கண்ட, காதால் கேட்ட, அல்லது வேறு புலனுறுப்புகளால் தான் உணர்ந்த/ அறிந்த உண்மைகளை முன்வைக்கின்றார்.
தீர்ப்பளிப்பவரோ, பல்வேறு சாட்சிகளிடமிருந்து சாட்சியங்களைக் கேட்டறிந்த பின், அச்சாட்சியங்கள் அனைத்திலுமிருந்து ஒரு முடிவுக்கு வருகின்றார். அம்முடிவே தீர்ப்பு. சாட்சியங்களைக் கேட்காமல் எந்தவொரு நீதிபதியும் தீர்ப்பளிப்பதில்லை.
வாக்களிக்கின்ற வாக்காளன் சாட்சியமளிப்பதில்லை; அவன் தீர்ப்பே அளிக்கின்றான். வாக்களிப்பின்போது, 'போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தொடர்பாக நானறிந்த உண்மைகள் இதோ', என்று அவன் சொல்லுவதில்லை. (அவ்வாறு கூறினால் அது சாட்சியமளித்தலாகும்). மாறாக அவனோ, 'இந்தப் போட்டியாளன் ஊழல்பேர்வழி/ குற்றவாளி, எனவே அவன் விரட்டப்படவேண்டும்; அந்தப் போட்டியாளன் அப்படியானவன் அல்ல, எனவே அவன் ஆட்சிக்கதிரையில் அமர்த்தப்படவேண்டும்' என்கின்றான். இது தீர்ப்பளித்தலாகும்.
இவ்வாறு தீர்ப்பளிக்கின்ற ஒரு வாக்காளனிடம் தான் தீர்ப்பளித்த போட்டியாளன் தொடர்பான சாட்சியங்கள்/ ஆதாரங்கள் எதுவும் கிடையாது. யாராவது சாட்சியங்களை/ ஆதாரங்களை அவன் முன்னே வைத்தாலும்கூட அவற்றையெல்லாம் தொகுத்து வகுத்து முடிவெடுக்கின்ற ஆற்றலோ அறிவோ அவனுக்குக் கிடையாது. போட்டியாளர்களின் கடந்தகாலச் செயற்பாடுகளின் நன்மை தீமைகள் பற்றியோ, அல்லது அவர்கள் இன்று முன்வைக்கின்ற கொள்கைத்திட்டங்களின் எதிர்கால விளைவுகள் பற்றியோ அவனுக்குக் கொஞ்சமும் புரிதல் கிடையாது. இவ்வாறான பாமரனால் எவ்வாறு தீர்ப்பளிக்க முடியும்? அறிவிலிகள் தீர்ப்பளிப்பது இஸ்லாத்தின் பார்வையில் பாவமன்றோ?
தாடிகளின் நீளத்தையும் பெண்கள் அணியும் உடைகளின் நிறங்கள் தொடர்பாகவும் மாத்திரமே விவாதிப்பதில் காலம் கடத்துகின்ற எமது உலமாக்கள் முஸ்லிம் சமூகத்தை ஒரு அரசியல் அறிவற்ற சமூகமாகவே எப்போதும் வைத்திருக்கின்றார்கள். ஆனால், தேர்தல் ஆணையாளர் தேர்தல் ஒன்றை அறிவித்ததும் தீர்ப்பளிக்கின்ற மாபெரும் பொறுப்பை மக்கள் மீது சுமத்திவிடுகின்றார்கள். (அதற்கு "சாட்சியமளித்தல்" என்று பொருந்தாத 'லேபலும்' அடித்துவிடுகின்றார்கள்). இந்த மடமையை என்னென்பது?
-Mohamed Faizal-