கிண்ணியாவின் முதன்மையாளர்கள் -20 முதல் பொலிஸ் அதிகாரி மர்ஹூம் எம்.எல்.வைத்துல்லாஹ்

கிண்ணியாவின் முதன்மையாளர்கள் -20 முதல் பொலிஸ் அதிகாரி மர்ஹூம் எம்.எல்.வைத்துல்லாஹ்

கிண்ணியாவின் முதல் பொலிஸ் அதிகாரி மர்ஹூம் எம்.எல்.வைத்துல்லாஹ் அவர்களாவார். இவர் மர்ஹூம்களான முகம்மது லெத்தீப் - சதக்கும்மா தம்பதிகளின் மகனாக 1965.11.16 ஆம் திகதி சின்னக் கிண்ணியாவில் பிறந்தார்.

தனது ஆரம்பக் கல்வியை அல் அக்ஸா கல்லூரியில் கற்ற இவர் உயர் கல்வியை கிண்ணியா மத்திய கல்லூரியில் கற்றார். 1987ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய இவர் அதனைத் தொடர்ந்து தேசிய துணைப்படையில் (NAF) இணைந்தார்.

1988.01.18ஆம் திகதி உதவிப் பொலிஸ் பரிசோதகராக (SI) இலங்கைப் பொலிஸ் சேவையில் இணைந்தார். இதன் மூலம் கிண்ணியாவின் முதல் பொலிஸ் அதிகாரி என்ற பெருமையை இவர் பெறுகின்றார். பல்வேறு பிரதேசங்களிலும் கடமையாற்றிய இவர் பயங்கரம் நிலவிய அக்காலப் பகுதியில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பல்வேறு வகையிலும் உதவிகள் செய்தார்.

தனது அர்ப்பணிப்பான சேவையின் மூலம் பொலிஸ் திணைக்களத்தின் நன்மதிப்பைப் பெற்றிருந்த இவர் புலனாய்வுத் துறையோடு இணைக்கப்பட்டார். இவரது சேவை அக்காலப் பகுதியில் மிகவும் பெறுமதியானதாகக் கருதப்பட்டது. 

தனது அயரா முயற்சி மூலம் 1998 ஆம் ஆண்டு பொலிஸ் பரிசோதகராக (IP) பதவியுயர்வு பெற்றார். அக்காலப் பகுதியில் முஸ்லிம்களுக்கு இருந்த அச்சுறுத்தல் குறித்து அதிக கவனம் செலுத்தினார். முஸ்லிம் மக்களின் பாதுகாப்பு விடயத்தில் தன்னால் முடியுமான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இக்காலப் பகுதியில் முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரபோடு இவருக்கு நெருக்கம் ஏற்பட்டது. அவரது அரசியல் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட இவர் அரசியலில் பிரவேசிக்கும் நோக்கோடு 1999இல் தனது பதவியை இராஜினாமாச் செய்தார்.

முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்ட இவருக்கு கட்சியின் திருகோணமலை மாவட்ட பிரதி அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. அதனை வைத்து மாவட்டம் முழுக்க சென்று கட்சியின் கிளைகளைப் புனரமைத்து அதற்கான வளர்ச்சிப் பணியை மேற்கொண்டார். நல்லதொரு தலைமைத்துவத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த மக்களுக்கு இவரது வருகை பெரும் வரப்பிரசாதமாக அமைந்தது. 

இதனால் சாரிசாரியாக மக்கள் இவரது அணியில் இணைந்து கொண்டனர். ஐக்கிய தேசியக் கட்சி - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்று ஊறிப் போயிருந்த திருகோணமலை மாவட்ட முஸ்லிம் மக்களை தனது வீரக் கருத்துக்கள் மூலம் அவற்றிலிருந்து பிரித்து மூன்றாவது அரசியல் சக்தியை  தோற்றுவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸ் ஏனைய முஸ்லிம் பகுதிகளில் செல்வாக்குப் பெற்றதைப் போல கிண்ணியாவில் அதனால் செல்வாக்குப் பெற முடியாத நிலை காணப்பட்டது. இந்நிலையை இவர் மாற்றியமைத்தார்.

2000 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இவர் போட்டியிட்டார். இவரது கூட்டங்களில் மக்கள் அலைமோதியதைக் கண்ட பலர் தேர்தலுக்கு முன்பே இவர் எம்.பியாகி விட்டதாகப் பேசிக் கொண்டனர். 2000.10.02ஆம் திகதி மூதூர் கலாசார மண்டபத்துக்கு அருகில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் வைத்து தற்கொலை குண்டுதாரியால் இவர் கொல்லப்பட்டார். இவரோடு பல அப்பாவி மக்களும் கொல்லப்பட்டனர்.

இவரது ஜனாஸாத் தொழுகை கிண்ணியா அல் அக்ஸா கல்லூரி மைதானத்தில் பெருந்திரளான மக்கள் பங்கேற்புடன் மர்ஹூம் எஸ்.எல்.எம்.ஹஸன் அஷ்ஹரியினால் நிறைவேற்றப்பட்டது. பொலிஸ் மரியாதையுடன் றஹ்மானியா பொதுமையவாடியில் இவரது ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது. 

தேர்தல் 2000.10.10 ஆம் திகதி நடக்கவிருக்கையில் நிகழ்ந்த இவரது மரணம் திருகோணமலை மாவட்டத்தில்  வேட்பாளர் குறையை ஏற்படுத்தியது. எனினும். பொதுமக்கள் அவரது இலக்கத்திற்கு விருப்பு வாக்கு வழங்கினர். இதனால் அவரது இலக்கம் இத்தேர்தலில் வெற்றி பெற்றது.

மர்ஹூம் வைத்துல்லாஹ்வின் பிரத்தியேகச் செயலாளராக செயற்பட்டு வந்த ஆங்கில ஆசிரியரான அவரது ஒன்று விட்ட சகோதர் எம்.எஸ்.தௌபீக்கின் பெயர் பதில் வேட்பாளராக பதிலீடு செய்யப்பட்டதன் மூலம் அவர் பாராளுமன்ற உறுப்பினரானார்.

திருமதி சைனூன்பீவி இவரது துணைவியாவார். அறபாத், இப்லாஸ், பாத்திமா சிப்ரீன், பாசில் ஆகியோர் இவரது பிள்ளைகளாவர்.

மர்ஹூம் வைத்துல்லாஹ்வுடன் உயர்தர வகுப்பு படித்தவன் என்ற வகையில் அவரது தனிப்பட்ட குணாதிசயங்கள் பற்றி எனக்கு நன்கு தெரியும். பாடசாலைக் காலத்தில் புகைப்படங்கள் எடுக்கும் போது அவர் நிற்கும் நிலையைப் பார்த்து நாங்கள் எஸ்.ஐ.என்று அவரை கிண்டல் செய்வது வழக்கம். அதுவே அவரது வாழ்வில் யதார்த்தமாகி விட்டது.

தேடல்:

ஏ.ஸீ.எம்.முஸ்இல்