தன்மீதான குற்றச்சாட்டின் பின்னணியில் கப்பம் பெறும் முயற்சி - KinniyaNews
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிவாய்ப்பை தடுத்து, எதிரணி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சாதகமாக தேர்தல் முடிவை அடைவதற்கு சில செய்தி ஊடகங்கள் எத்தனித்து வருவது மிகவும் கீழ்த்தரமான செயலாகும். இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஹிஸ்புல்லாஹ் போன்றவர்களால் கூலிக்கு அமர்த்தப்பட்ட பேர்வழிகளை பாவித்து குறுகிய அரசியல் இலாபம் தேடுவதாகவும், அத்தகைய நபர்கள் தம்மிடமும் கப்பம் பெற எத்தனித்ததாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் குற்றம்சாட்டினார்.
கொழும்பு 2 இல் அமைந்துள்ள புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பிரதான தேர்தல் பிரசார காரியாலயத்தில் இன்று (07) நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பான தொலைபேசி குரல் ஒலிப்பதிவுகளையும் அவர் ஊடகவியலாளர்களை செவிமடுக்க வைத்தார். தேவையேற்படின் கைவசமுள்ள அதன் காணொளியையும் காட்சிப்படுத்தலாம் என்றார்.
சம்பந்தப்பட்ட நபரான றிஸாம் மரூஸ் தமது கட்சியின் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சிப்லி பாரூக்கை அடுத்தடுத்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அமைச்சரை பயங்கரவாதி ஸஹ்ரானுடன் தொடர்புபடுத்தி பேசியமைக்கு வருந்துவதாகவும், அதுதொடர்பில் தன்னுடன் பேசுவதற்கான அவகாசத்தை பெற்றுத் தருமாறும் கேட்டுள்ளார்.
றிஸாம் மரூஸ் ஒருநாள் சிப்லி பாரூக்குடன் என்னை சந்திப்பதற்கு வந்தார். இச்சந்திப்பின்போது நான் பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்தாக அவர் குற்றம்சாட்டியதில் எவ்வித உண்மைகளும் இல்லையென்பது தனக்கு நன்றாக தெரியுமென்று தெரிவித்தார். அத்துடன் தனது பொருளாதார நெருக்கடி காரணமாகவே அவ்வாறு செய்ய முற்பட்டாக கூறியதோடு, இது சம்பந்தமான மறுப்பை ஊடக மாநாடொன்றில் தெரிவிக்க முடியும் என்று கூறினார்.
இந்த பேர்வழியின் நடவடிக்கை தொடர்பில் சந்தேகம் கொண்ட நான், அவரது தொலைபேசி உரையாடலை பதிவு செய்துகொள்ளுமாறு சிப்லி பாரூக்கிடம் கூறியிருந்தேன்.
அதனைத் தொடர்ந்து, சிப்லி பாரூக்கை மீண்டும் தொடர்புகொண்டு ஒரு கோடி ரூபா பணத்தை கப்பமாக தருமாறு கேட்டிருக்கிறார். அவர் அதற்கு உடன்படாத காரணத்தினால், பின்னர் பேரம்பேசி அந்த ஊடக சந்திப்புக்கு முன்னர் 25 இலட்சம் ரூபாவும் அதன்பின்னர் 25 இலட்சம் ரூபாவும் தருமாறு கோரியுள்ளார்.
எனக்கு எதிராக புனையப்பட்ட இந்த குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்களுக்கு பெருந்தொகை பணத்தை ஹிஸ்புல்லாஹ் வழங்கிவருகிறார் என்றும், அவருக்கும் மொட்டு கட்சியின் அரசியல்வாதி ஒருவருக்கும் இடையிலுள்ள தொடர்பினாலேயே இவையெல்லாம் நடப்பதாகவும் கூறினார். நாகரீகம் கருதி குறித்த அரசியல்வாதியின் பெயரை வெளியிடுவதற்கு நான் விரும்பவில்லை.
றிஸாம் மரூஸ் என்ற அந்த நபர், ஹிஸ்புல்லாஹ்வின் பின்னணி மற்றும் நடவடிக்கைகள் தொடர்பில் பல விடயங்களை என்னிடம் கூறியிருந்த போதிலும், அவற்றை முழுவதுமாக பகிரங்கப்படுத்தி அரசியல் இலாபம்தேட விரும்பவில்லை. என்மீது குற்றம்சாட்டியவர்கள் பணம் கொடுத்து இயக்கப்பட்டவர்கள் என்பது பற்றி விளக்கமளிக்கவே இந்த ஊடக மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தேன்.
றிஸாம் மரூஸ் தன்னுடன் முஹம்மத் மிப்லால் மௌலவி, “மவ்பிம வெனுவென் ரணவிரு” என்ற அமைப்பைச் சேர்ந்த அஜித் பிரசன்ன ஆகியோருக்கும் இவ்வாறு பணம் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.
இந்த குரல்பதிவுகளின் நம்பகத்தன்மை ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஹக்கீம், தனது 25 வருட பாராளுமன்ற அரசியலில் நேர்மையாக நடந்துள்ளதாகவும் தனது, நற்பெயருக்கு களங்கம் ஏற்பட விரும்புவதில்லை என்றும், அதன் நம்பகத்தன்மைக்கு தாம் பொறுப்பேற்பதாகவும் தெரிவித்தார்.
தேவையேற்படின் குறித்த குரல்பதிவுகளை சிங்கப்பூர் அல்லது வேறேதும் நாடகளுக்கு அனுப்பி பரிசீலனை செய்யமுடியும். அரசாங்க பகுப்பாய்வாளருக்கும் அதனை பரீசிலினைக்கு அனுப்ப முடியும் என்றார்.
தம்மைப் பற்றி அவதூறு பரப்பிவரும் இவ்வாறான இலத்திரனியல் ஊடகங்கள், இதன் பின்னரும் தனக்கு சேறுபூசும் மட்டகரமான காரியங்களில் ஈடுபடுமானால் அவற்றுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று அமைச்சர் எச்சரித்தார்.