17 ஆண்டுகள் குகையில் மறைந்து வாழ்ந்த குற்றவாளியை காட்டிக்கொடுத்த ட்ரோன்
world
சீனாவில் 17 ஆண்டுகளுக்கு முன்பு காவல்துறையின் பிடியிலிருந்து தப்பியோடி, தனியே குகையில் வசித்து வந்த நபரை ட்ரோன் உதவி கொண்டு அந்நாட்டு காவல்துறையினர் பிடித்துள்ள சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் 63 வயதாகும் சாங் ஜியாங், 2002இல் பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்திய குற்றச்சாட்டின் கீழ் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தபோது அங்கிருந்து தப்பியோடி சென்றுவிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மனிதர்களின் நடமாட்டமே இல்லாத இடத்தில் பல ஆண்டுகளாக சிறிய குகையில் இவர் வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது.
சாங்கின் இருப்பிடம் குறித்த ஆரம்பகட்ட தகவல்கள் செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்தில் கிடைத்ததாக யோங்க்ஷன் காவல்துறையினர் தங்களது 'வீ சாட்' சமூக வலைதளக் கணக்கில் தெரிவித்துள்ளனர்.
அதை அடிப்படையாக கொண்டு சீனாவின் தென்மேற்கு பகுதியிலுள்ள யுன்னான் மாகாணத்தை பூர்விகமாக கொண்ட சாங்கின் வீட்டிற்கு அருகிலுள்ள மலைகளில் காவல்துறையினர் தேடுதல் வேட்டையை தொடங்கினர்.
வழக்கமான தேடுதல் முயற்சிகள் பலனளிக்காததை தொடர்ந்து, இப்பணியில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உதவும் பணியில் ட்ரோன்கள் ஈடுபடுத்தப்பட்டன.
அப்போது, சிறிதும் எதிர்பார்க்காத வகையில் நீல நிறத்திலான கூரை ஒன்று மலையின் சரிவில் இருப்பது கண்டறியப்பட்டது. அதுமட்டுமின்றி, அங்கு மனிதர்கள் வாழ்வதை உறுதிப்படுத்தும் வகையிலான வீட்டு கழிவுப்பொருட்களும் அருகிலுள்ள இடத்தில் கண்டறியப்பட்டது.
- அண்டார்டிகாவில் குட்டி போட்ட பனிப்பாறை: 50 ஆண்டுகளில் இல்லாத அளவு பெரிய அதிசயம்
- தனது முட்டைகளை டைனோசர் அடைகாத்தது எப்படி?
அதைத்தொடர்ந்து, ட்ரோன் மூலம் கிடைத்த தகவலை வைத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், சிறிய குகை ஒன்றில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் சாங்கை கையும் களவுமாக பிடித்தனர்.
சாங் பல ஆண்டுகளுக்கு மனிதர்களுடன் எவ்வித தொடர்பும் இல்லாமல் இந்த பகுதியில் தனித்து வசித்து வந்ததால் அவரை எளிதில் கண்டறிய முடியவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தான் வசித்து வந்த குகைக்கு அருகே உள்ள ஆற்றிலிருந்து நெகிழியாலான புட்டிகளை பயன்படுத்தி சாங் குடிநீரை பெற்றதாகவும், மரங்களின் கிளைகளை கொண்டு அவர் நெருப்பு மூட்டியதாகவும் சீனாவின் அரசு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட சாங், 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.