திருமணத்திற்கு வெளியே உறவு: சட்டத்தை வகுத்த நபரே அதை மீறியதால் தண்டனை

திருமணத்திற்கு வெளியே உறவு: சட்டத்தை வகுத்த நபரே அதை மீறியதால் தண்டனை

இந்தோனீசியாவில், திருமணத்திற்கு வெளியே உறவு வைத்துக் கொள்பவருக்கு எதிராக இயற்றப்பட்ட கடுமையான சட்டத்தின் வரைவை தயாரிக்க உதவியவர் முக்லிஸ் பின் முகமது. ஆனால், அவரே திருமணம் ஆன ஒரு பெண்ணுடன் உறவு வைத்துக் கொண்ட காரணத்திற்காக பொது வெளியில் தண்டிக்கப்பட்டார்

அசே உலமா கவுன்சிலின் முக்லிஸ் பின் முகமது, 28 முறை பிரம்பால் அடிக்கப்பட்டார்.

அவருடன் உறவில் இருந்த பெண்ணிற்கு 23 பிரம்படிகள் கொடுக்கப்பட்டன.

இந்தோனீசியாவில், ஷரியா என்ற கடுமையான இஸ்லாமியச் சட்டங்களை பின்பற்றும் பகுதியான அக்ஹே பகுதியிலிருந்து வந்தவர் முக்லிஸ் முகமது. அங்கு ஒரு பாலின உறவுமுறை மற்றும் சூதாட்டம் கூட பொதுவெளியில் சவுக்கடிகள் பெறவைக்கும்.

"இது கடவுளின் சட்டம். தவறு என்று நிரூபிக்கப்பட்டால், யாராக இருந்தாலும், சவுக்கடி அளிக்கப்படும்" என்று பிபிசி இந்தோனீசிய சேவையிடம் தெரிவித்தார் அக்ஹே பெசார் மாவட்டத்தின் இணை ஆணையர் ஹுசைனி வஹாப்.

சுற்றுலாப் பயணிகள் வரும் கடற்கரைப்பகுதியில், நிறுத்தி வைத்திருந்த காரில், இந்த இருவரையும் அதிகாரிகள் பிடித்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை சவுக்கடி கொடுக்கப்பட்டதை தொடர்ந்து உலமா அமைப்பிலிருந்து முக்லிஸ் நீக்கப்படலாம் என்கிறார் ஹுசைனி.

46 வயதாகும் முக்லிஸ், ஒரு இஸ்லாமிய மதத்தலைவர். 2005ஆம் ஆண்டு, ஷரியா என்ற இந்த சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, இதில் தண்டனை பெறும் முதல் மதத்தலைவர் இவர்தான்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு, தங்களுக்கான மிகவும் கடுமையான இஸ்லாமியச் சட்டத்தை உருவாக்கிக்கொள்ள அகேஹவிற்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஒரு பாலினத்தவருக்கு எதிரான சட்டம் 2014இல் நிறைவேற்றப்பட்டு, அடுத்த ஆண்டே நடைமுறைக்கு வந்தது.

ஷரியா சட்டத்தின் கீழ், திருமணத்திற்கு வெளியே கொள்ளும் தகாத உறவு, சூதாட்டம், மது குடித்தல், தயாரித்தல் மற்றும் விற்பனை ஆகியவையும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

2017ஆம் ஆண்டு, இரு ஆண்கள் உறவுகொண்டதற்காக ஒவ்வொருவருக்கும் 83 பிரம்படிகள் வழங்கப்பட்டன.

  • திணறும் தலைநகர்: மோசமான காற்று மாசால் அவதிப்படும் மக்கள்
  • 40 ஆண்டுகளாக மண் சாப்பிட்டு வாழ்ந்து வரும் மரியசெல்வம் பாட்டி

தண்டனையை அளிப்பவர்கள் தாங்கள் யார் என்ற அடையாளம் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக துணிகளால் தங்களை முழுமையாக மறைத்துக்கொள்கிறார்கள்.

மக்கள் அனைவரும் நின்று பார்க்கக்கூடிய வகையிலேயே இந்த பிரம்படிகள் வழங்கப்படுகின்றன. இருப்பினும், இதைப்பார்க்கக் குழந்தைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அகேஹ்வில் வாழும், இஸ்லாமியர்களுக்கும், இஸ்லாமை சேராதவர்களுக்கும் இந்த ஷரியா சட்டம் ஒரே மாதிரியாகச் செயல்படுகிறது.