சஜித்துடன் சமூகம் சார்ந்த விடயங்களில் எவ்வித உடன்படிக்கையும் செய்யவில்லை - KinniyaNews
நாங்கள் எங்களது ஜனாதிபதி வேட்பாளருடன் சமூகம் சார்ந்த விடயங்களில் எவ்வித உடன்படிக்கையும் செய்யவில்லை என்று கூறுகின்றார்கள். இவ்வாறு உடன்படிக்கை செய்வதன் ஊடாக சிறுபான்மை சமூகத்திற்கு சாதகமானவற்றை சொல்லிவிட்டால் அவற்றை கொண்டுபோய் அப்பாவி நாட்டுப்புற பெரும்பான்மை சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் வித்தியாசமான இனவாத நோக்கோடு பிரசாரம் செய்ய ஒரு கும்பல் காத்துக்கொண்டிருக்கின்ற நிலையில் நாங்கள் மிகவும் அவதானமாகத் தான் விவகாரங்களை கையாள வேண்டியுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கிம் தெரிவித்தார்.
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கும் பிரசார கூட்டம் வெள்ளிக்கிழமை (08) திருகோணமலையில் இடம்பெற்ற போதே அவர் இதனை கூறினார்.
அமைச்சர் ஹக்கீம் உரையாற்றுகையில் மேலும் தெரிவித்தாவது,
திருகோணமலை மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு மிகக் குறைவான உறுப்பினர்களே தெரிவாகின்றனர். மூவின மக்களும் ஒற்றுமையாக வாழ்கின்ற சூழ்நிலையில் அவ்வப்போது சில பிரச்சினைகள் உருவெடுத்தாலும், தமிழ் பேசும் மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் குறிப்பான அவதானத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற எங்களோடு சிநேகபூர்வமான அரசியல் உறவை பேணுகின்ற கட்சிகளோடு கலந்துரையாடி முன்னைய அரசிலும் பார்க்க இந்த அரசாங்கத்தில் பல பிரச்சினைகளை வெற்றிகரமாக தீர்த்துவைக்கப்பட்டுள்ளன.
ஒருசில அமைப்புக்கள் தமிழ் மக்களுக்கிருந்த கெடுபிடிகளை அகற்றுவதில் நாங்கள் போதிய அக்கறை காட்டவில்லை என்று நினைக்கின்றனர். இரண்டு பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமது சமூகம் சார்ந்த விடயங்கள் எவையும் குறிப்பிடப்பட்டில்லை என்று குற்றம் சுமத்துகின்றார்கள். இதே குற்றச்சாட்டை முஸ்லிம் தலைமைகளின் மீதும் சொல்கின்றார்கள்.
நாங்கள் சமூகம் சார்ந்த விடயங்களில் எவ்வித உடன்படிக்கையும் செய்யவில்லை என்று கூறுகின்றார்கள். இவ்வாறு உடன்படிக்கை செய்வதன் ஊடாக சிறுபான்மை சமூகத்திற்கு சாதகமாக எவற்றையும் சொல்லிவிட்டால் அதனை கொண்டுபோய் அப்பாவி நாட்டுப்புற பெரும்பான்மை சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் வித்தியாசமான இனவாத நோக்கோடு பிரசாரம் செய்ய ஒரு கும்பல் காத்துக்கொண்டிருக்கின்ற நிலையில் நாங்கள் மிகவும் அவதானமாகத் தான் விவகாரங்களை கையாள வேண்டியுள்ளது.
இப்பொழுது பெரும்பான்மை மக்கள் மத்தியில் சஜித் பிரேமதாஸவுக்குள்ள உற்சாகமும் வரவேற்பும் அபரிமிதமானவை. அவர் இந்நாட்டின் இறைமைக்கும் மக்களது ஒற்றுமைக்கும், பாதுகாப்புக்கும் குந்தகம் இல்லாத வகையில் போதிய அதிகார பரவலாக்கத்தை வழங்கத் தயாராகவுள்ளதாக கூறுகின்றார்.
அவர் மீது பெரும்பான்மை மக்கள் வைத்துள்ள பேரபிமானத்தை ஏதாவதொரு விதத்தில் இல்லாமல் செய்வதற்கு இனவாத சக்திகள் வழிப்பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். இத்தகைய கும்பலுக்கெதிராக அரசியல் செய்கின்றபோது சிறுபான்மை தலைமைகள் இவ்விடயம் தொடர்பில் மிகுந்த அவதானத்தோடு நடந்துகொள்ள வேண்டியுள்ளது.
இந்த நிலையில் தான் சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளவற்றிலும், இந்நாட்டில் தேவையில்லாமல் இனவாதத்தை தூண்டுவதற்கு மாற்றுத் தரப்பினருக்கு இடமளிக்காமல் மிகப் பக்குவமாக கையாளப்பட்டுள்ளது.
ஏனெனில், யாழ்ப்பாணத்தில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட சர்வதேச விமான நிலையத்தின் பெயர் பலகையில் முதலிலேயே தமிழில் பெயரிடப்பட்டதை வைத்து சிங்கள மொழியை இரண்டாம் பட்சமாக்கிவிட்டார்கள் என்று படுமோசமான தரங்கெட்ட இனவாத அரசியலை செய்கின்ற கும்பலாகத்தான் அவர்கள் காணப்படுகின்றனர்.
இந்நாட்டின் அரசியல் யாப்பில் இரு மொழிகளுமே அரச கரும மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில் குறைந்தபட்சம் 99 சதவீத தமிழ் மக்கள் குடியிருக்கின்ற யாழ்ப்பாண தீபகற்பகத்தில் அவ்வாறு தமிழில் முதலில் பெயர் பலகையொன்றை எழுதினால் பெரும்பான்மை சமூகத்தை காட்டிக்கொடுக்கின்ற விடயமாக அதனை மாற்றி அரசியல் பேசுகின்ற இந்த கும்பலை சரிவர அடையாளம் கண்டுள்ளோம்.
அத்தகைய இனவாதிகளிடத்தில் எந்த நியாயத்தை அல்லது உரிமைகளை தமிழ் மக்கள் கேட்டுப் பெற்றுக்கொள்ள முடியும்? ஆனால், இதே வேளையை அவர்களோ அல்லது அவர்களின் கும்பலில் ஒருவரோ செய்தால் அது பிழையாக கருதப்பட மாட்டாது. அதனை நாங்கள் செய்தால் தான் தேச துரோகிகளாக சித்திரிக்கப்படுகின்றோம். எங்களை தான் பயங்கரவாதிகளாக எடுத்து காட்டுகின்றார்கள்.
இந்நாட்டின் இறைமைக்கும் மக்களது ஒற்றுமைக்கும், பாதுகாப்புக்கும் குந்தகம் இல்லாத வகையில் போதிய அதிகார பரவலாக்கத்தை வழங்கத் தயாராகவுள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ கூறுகின்றார். ஆயினும், அவர் மீது பெரும்பான்மை மக்களுக்குள்ள பேரபிமானத்தை ஏதாவதொரு விதத்தில் இல்லாமல் செய்வதற்கு இனவாத சக்திகள் வழிப்பார்த்துக் கொண்டிருக்கின்றன.
எதிரணியில் மொட்டுக் கட்சிக்காரர்களுடன் முன்னாள் பயங்கரவாதிகள் அனைவரும், ஒரே மேடையில் ஒன்றாக அமர்ந்து கொண்டிருக்கின்றார்கள். திருகோணமலையில் முதலாவது வடக்கு கிழக்கு மாகாண சபை அமைந்தபோது அதில் எங்களுடைய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உத்தியோகபூர்வ எதிர்கட்சியாக இருக்கத்தக்கதாக, நாங்களும் எதிர்ப்பை தெரிவித்திருக்கத்தக்கதாக ஒரு தலை பட்சமாக ஈழப்பிரகடனம் செய்தார்கள். ஆனால், அந்த ஈழப்பிரகடனத்தை செய்த வரதராஜ பெருமாள் இன்று அவர்களுடன் மேடையில் உட்கார்ந்திருக்கின்றார்.
எங்களுடைய அரசாங்கம் 2015 ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டு வரை சகல துறைகளிலும், அபிவிருத்தி நடவடிக்கைகளையும் முன்னேற்றகரமான மாற்றங்களையும் மேற்கொண்டுள்ளது. ஆனாலும், அதை பற்றி பொது மக்கள் மத்தியில் போதிய பிரசாரம் செய்யப்படவில்லை. ஆகையால், அவை பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்துவது அவசியமாகும்.
ஆட்சி அதிகாரத்தை பாராளுமன்றத்தில் பின்கதவால் வந்து சிறிது காலம் கைப்பற்றி வைத்திருந்தவர்கள் இப்பொழுது முன்கதவால் ஜனாதிபதி பதவியை கைப்பற்ற வந்திருக்கின்றார்கள். தமது முயற்சி தோல்வியில் முடிந்ததன் விளைவாக இப்பொழுது முன்கதவால் ஜனாதிபதி பதவியை பெற முண்டியடித்துகொண்டிருக்கின்றார்கள்.
இவ்வாறு இருக்க, ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்துள்ள புதிய ஜனநாயக முன்னணிக்கு இப்பொழுது மக்கள் மத்தியில் காணப்படும் உத்வேகமும் உற்சாகமும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.
நானும் கடந்த 25 வருடங்களாக ஐக்கிய தேசிய கட்சியுடன் அரசியல் செய்து வருகின்றேன். ஆனால், ஆதரவாளர்கள் மத்தியில் இவ்வாறான அதிகபட்சமான உற்சாகத்தை முன்னர் ஒருபோதும் கண்டதில்லை.
அண்மையில் நடந்த ஒரு ஊடக மாநாட்டில் வெளிநாட்டு ஊடகமொன்றில் பெண் ஊடகவியலாளர் ஒருவர் யுத்த முடிவின் போது காணாமல் போனோர் பற்றி ஐ.நா.வில் உங்களுக்கெதிரான ஒரு குற்றச்சாட்டு இருக்கிறதல்லாவா என எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்க முடியாமல் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ திணறியதை எல்லோரும் கண்டீர்கள். அப்பொழுது கோட்டாபய ராஜபக்ஷவும் மஹிந்த ராஜபக்ஷவும் ஆளுக்காள் முகத்தை பார்த்தபடி திக்குமுக்காடி போனார்கள்.
யுத்தத்தை நாங்கள் செய்யவில்லை. இராணுவ தளபதியே அதில் ஈடுபட்டார் என கூறி மழுப்பினார். இப்படி சொல்பவர்கள் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகாவை கீழ்த்தரமான முறையில் கைது செய்து, சிறையில் அடைத்து அவமானப்படுத்தியது மாத்தரமல்லாமல், இப்போது இவ்வாறு சொல்கின்றார்கள். சர்வதேசத்தின் குற்றச்சாட்டு தம் மீது சுமத்தப்படுவதை வேறொருவர் மீது சுமத்தி தப்பித்துக் கொள்வதற்காகவே இவ்வாறு கூறுகின்றனர்.
ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவை முன்னிலைப்படுத்துவதிலும் பிரச்சினைகள் இருந்தன. அதில் கயிறிழுப்பு இருந்தமை உங்களுக்கு தெரியும். நாங்களே கொண்டுவந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஆண்டு ஓக்டோபர் மாதம் 21ஆம் திகதி நடத்திய நாடகம் நாடறிந்தது.
பாராளுமன்றத்தில் அப்பொழுது நடந்த அட்டகாசம் பற்றியும் எல்லோருக்கும் தெரியும். பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க அவர்கள் பட்டபாடும், அத்துடன் எங்களது பாராளுமன்ற உறுப்பினர்களை விலைபோகாமல் காப்பாற்றுவதற்காக ஹோட்டல் அறைகளில் அவர்களை பூட்டி வைத்து, போதாக்குறைக்கு பின்னர் அவர்களை புனித மக்காவுக்கு அழைத்துச்சென்று, அவர்களிடம் சத்தியவாக்கு வாங்கி பின்னர் நிலைமை சீரானதும் மீண்டும் நாட்டுக்கு கொண்டுவந்து சேர்த்தோம்.
இத்தனையும் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஜனாதிபதி பதவியில் இன்னும் ஒரு வார காலமே இருக்க முடியும். அதற்குள் இப்போது அவருக்கு பாராளுமன்றத்தில் ஒரு தேசிய பட்டியல் ஆசனம் தேவைப்படுகின்றதாம். தமது கட்சி சார்பில் அதற்காக பாராளுமன்றத்தில் தேசியப்பட்டியல் உள்ளவர்களிடம் பதவியை இராஜினாமா செய்து தருமாறு கெஞ்சிக்கொண்டிருப்பதாக தெரிகின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ஒருசாரார் போய் மொட்டு சின்னத்தில் மேலும் ஒட்டிக்கொண்டிருக்கின்றனர். அத்துடன் அக்கட்சியின் அமைப்பாளர்கள் அநேகர் சாரிசாரியாக வந்து எங்களது முன்னணியுடன் இணைந்துகொண்டிருக்கின்றனர்.
அண்மையில் சுகததாஸ உள்ளக அரங்கில் வைத்து ஆயிரக்கணக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்னணி உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க அணியுடன் சங்கமித்திருக்கின்றார்கள். அவர்கள் அனைவரும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் வெற்றிக்காக மிகவும் அர்ப்பணிப்புடன் இப்பொழுது களத்தில் இறங்கியிருக்கின்றார்கள்.
இவ்வாறான மகத்தான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும் போது நாங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியிருக்கின்றன. அடுத்த 13ஆம் திகதி புதன்கிழமையோடு தேர்தல் பிரசார நடவடிக்கைகள் அனைத்தும் முற்றுப்பெற்றுவிடும். அதற்குள்ளாக வீடு வீடாகச் சென்று வாக்களர்களை அறிவுறுத்த வேண்டிய கடமையும் பொறுப்பும் எங்கள் ஒவ்வொருவருக்கும் உரியது.
உலகின் ஆழமான இயற்கை துறைமுகங்களுள் ஒன்றான திருகோணமலையை மேலும் அபிவிருத்தி செய்யவுள்ளோம். வெளிநாட்டு மூலதனத்தை கொண்டுவந்து திருகோணமலை மாவட்டத்தில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு தொழிற்சாலைகளை நிறுவி அதிக தொழில் வாய்ப்புகள் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளன.