அமெரிக்க நிறுவனத்துடனான அரசாங்கத்தின் ஒப்பந்தம் குறித்து சந்தேகம்

அமெரிக்க நிறுவனத்துடனான அரசாங்கத்தின் ஒப்பந்தம் குறித்து சந்தேகம்

அமெரிக்காவின் மிலேனியம் சாவால்கள் கூட்டுதாபனத்துடன் அரசாங்கம் கைச்சாத்திட ஆயத்தமாகும் ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் சந்தேகம் எழுவதாக எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் மிலேனியம் சாவால்கள் கூட்டுதாபனத்துடன் அரசாங்கம் கைச்சாத்திட தயாராகும் ஒப்பந்தம் குறித்து மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் பின்வரும் விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

´அமெரிக்காவின் மிலேனியம் சாவால்கள் கூட்டுதாபனத்துடன் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் தேர்தலுக்கு முன்னர் கைச்சாத்திட எதிர்பார்த்திருந்தாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

அதற்கமைய ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே எஞ்சியுள்ளன.

எனவே, தீர்மானம் மிக்க தேர்தல் ஒன்று நடைபெறவுள்ள நிலையில் அரசாங்கம் இவ்வாறு வெளிநாடு ஒன்றுடன் துரிதகதியில் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

அவ்வாறான ஒப்பந்தம் ஒன்றில் அரசாங்கம் கைச்சாத்திட வேண்டுமாயின் அதனை தேர்தலுக்கு பின்னர் செய்துக்கொள்ள முடியும்.

அதனையும் தாண்டி ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட வேண்டுமானால் அது குறித்த ஆவணத்தின் பிரதிகள் நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும். அத்துடன் அதனை பாராளுமன்றத்தில் சமர்பித்து விவாதத்திற்கு உட்படுத்த வேண்டியது அவசியமாகும்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் பெருந்தெருக்கல் அபிவிருத்தி மற்றும் காணி நிர்வாகத்தை மேம்படுத்தல் ஆகிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்தாலும், அதில் உள்ளடக்கப்பட்டுள்ள உண்மையான விடயங்கள் தொடர்பில் தெளிவுப்படுத்த வேண்டும்.

இதன் மூலம் நாட்டுக்கு நன்மை கிடைக்குமாக இருந்தால் எதற்காக இதனை ஒழிவுமறைவுடன் முன்னெடுக்க வேண்டும் என்பது சந்தேகத்துக்குரிய விடயமாகும்.

ஆகவே, மக்களுக்கு அறிவிக்காமாலும் பாராளுமன்றத்திற்கு அறிவிக்காமலும் செய்துக் கொள்ளப்படவுள்ள இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட கூடாது என எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.