இறுதி அஷ்திரமும் புஷ்வாணமாகியதால் ராஜபக்ஷ படையணி தோல்வி பீதியில்.! - KinniyaNews
ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவே வெற்றிபெறுவார் என்பதை புலனாய்வு அமைப்புகளின் அறிக்கைகளும், சிவில் அமைப்புகளின் கருத்து கணிப்புகளும் உறுதிப்படுத்தியுள்ளன என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.
நாட்டில் எட்டுத்திக்கிலும் வெற்றி அலை வீசுவதால் அதனை வரலாற்று வெற்றியாக மாற்றியமைப்பதற்காகவே தீவிரமாக செயற்பட்டுவருகின்றோம். எனவே, ‘சஜித் ஒப்பரேஷனை’ நவம்பர் 16 ஆம் திகதி வெற்றிகரமாக நிறைவுசெய்து, 18 ஆம் திகதி அவரை ஜனாதிபதி கதிரையில் நிச்சயம் அமரவைப்போம் என்றும் கூறினார்.
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் கண்டி திகன பகுதியில் நேற்று மாலை (08) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய வேலுகுமார் எம்.பி., இது தொடர்பில் மேலும் கூறியதாவது,
“ இனவாதத்தையும், மதவாதத்தையும் கையிலெடுத்தால் ஜனாதிபதி தேர்தலில் இலகுவில் வெற்றிபெற்று விடலாம் என்பதே ராஜபக்சக்களின் பிரசார வியூகமாக இருந்தது. இதற்காகவே விமல்வீரவன்ஸ, உதயகம்மன்பில உட்பட மேலும் பலர் அரசியல் மேடைகளில் இனவாதத்தை கக்கினர். மதவாதத்தை தூண்டினர். ஆனால் பெரும்பாலான சிங்கள மக்கள் இவற்றை நிராகரித்தனர்.
இதனால் கதிகலங்கிபோன ராஜபக்ச படையணி, வழமையான பாணியில் போர் வெற்றியை விற்று பிழைக்க முற்பட்டது. பழைய பல்லவியையே மீண்டும், மீண்டும் பாடியதால் அந்த வியூகமும் கைகூடவில்லை.
எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சஜித்துக்கு ஆதரவளிக்கும் முடிவை எடுத்தால் அதனை வைத்து சிங்கள, பௌத்த வாக்குகளை வேட்டையாடிவிடலாம் எனவும் ராஜபக்சக்களும், அவர்களின் சகாக்களும் திட்டம் போட்டனர்.
எனினும், களநிலவரத்தை சிறப்பாக ஆராய்ந்து, தந்திரோபாய விட்டுக்கொடுப்புடன் நிபந்தனையற்ற ஆதரவை சஜித் பிரேமதாசவுக்கு வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வந்ததால் - என்ன செய்வதென்று புரியாமல் மொட்டுக்கட்சி காரர்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர். இறுதி அஸ்திரமும் புஷ்வாணமாகும் நிலை உருவாகியுள்ளதால் தொடை நடுக்கம் ஏற்பட்டுள்ளது. சந்தர்ப்பவாத அரசியலுக்காகவே ராஜபக்சக்களும், அவர்களின் சகாக்களும் இனவாதம், மதவாதம் பேசுகின்றனர், போலிகளை பரப்புகின்றனர் என்பதை சிங்கள, பௌத்த மக்கள் இன்று உணர்ந்துவிட்டனர். சஜித்தின் கூட்டத்துக்கு அலைகடலென திரண்டுவரும் மக்கள் இதனை எம்மிடம் தெளிவுபடுத்துகின்றனர்.
அதேவேளை, சஜித் பிரேமதாசவின் வெற்றி உறுதியென புலனாய்வு அமைப்புகள் அறிக்கை சமர்ப்பித்துள்ளன. அரச சார்பற்ற அமைப்புகளால் நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளிலும் இது உறுதியாகியுள்ளது.
சில மாவட்டங்களில் மஹிந்தவுக்கு ஆதரவு இருந்தாலும், அதற்கு சமாந்தரமாக சஜித் அலையும் வீசுகின்றது. ஆனால், சஜித்துக்கு சாதகமாக உள்ள மாவட்டங்களில், சஜித் 100 வீதம் என்றால் மஹிந்த 35 வீதம் என்ற நிலையே இருக்கின்றது. அதாவது 65 சதவீத மேலதிக வாக்குகளால் மாவட்டங்களை சஜித் கைப்பற்றும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
அந்த வெற்றியை வரலாற்று வெற்றியாக மாற்றியமைப்பதே எமது இலக்காகும். அதற்காகவே தீவிரமாக செயற்பட்டுவருகின்றோம். சஜித்தால் மட்டுமே நாட்டில் நீடித்து நிலைக்ககூடிய நிலையான சமாதானத்தையும், நிலைபேண்தகு அபிவிருத்தியையும் ஏற்படுத்த முடிவும். எனவே, அன்னமே எங்கள் தெரிவாக இருக்கவேண்டும். அப்போதுதான் நல்லெண்ணங்கள் நாட்டில் நிறைவேறும்.” என்றார்.