முறையான கொள்முதல் திட்டமிடலின் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்துகிறார்
கொள்முதல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது மற்றும் தேசிய கொள்முதல் ஆணைக்குழுவை (NPC) பலப்படுத்துவதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
இன்று (ஒக்டோபர் 28) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே, தற்போதைய கொள்முதல் சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் குறித்து வடமாகாணசபை அதிகாரிகளுடன் ஆழ்ந்த கலந்துரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி, இந்தக் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
மூலதனச் செலவுகள் உட்பட அனைத்து அரசாங்க செலவினங்களில் 60% முறையான கொள்முதல் செயல்முறையைப் பின்பற்ற வேண்டும் என்றாலும், இந்த செயல்பாட்டில் உள்ள குறைபாடுகள் அரசாங்கத்திற்கு குறிப்பிடத்தக்க இழப்பை ஏற்படுத்துவதாக தேசிய கொள்முதல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் ஜனாதிபதிக்கு தெரிவித்தனர். இது, மோசடி மற்றும் ஊழலுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்குவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விவாதத்தில் தாமதம், வெளிப்படைத்தன்மை இல்லாமை மற்றும் கொள்முதல் செயல்பாட்டில் உள்ள திறமையின்மை தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. கோரப்படாத முன்மொழிவுகள் மற்றும் பொது-தனியார் கூட்டு (PPP) கொள்முதல் ஆகியவற்றில் குறைபாடுகளைக் குறைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
மேலும் முறையான கொள்முதல் திட்டமிடலை நிறுவுவதற்கு NPCயின் அதிகாரத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி திஸாநாயக்க சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD), ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, NPC தலைவர் சுதர்மா கருணாரத்ன மற்றும் தேசிய கொள்வனவு ஆணைக்குழுவின் ஏனைய அதிகாரிகள் கலந்துரையாடலில் கலந்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது