14 வயது சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய சிறிய தந்தை உட்பட இருவர் கைது - KinniyaNews
மட்டக்களப்பு, ஆயித்தியமலை பிரதேசத்தில் 14 வயது சிறுமியை விபச்சார நடவடிக்கையில் ஈடுபடுத்திய மற்றும் பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் சிறுமியின் சிறிய தந்தை மற்றும் தரகர் உட்பட இருவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற பதில் நீதவான் நேற்று (07) உத்தரவிட்டார்.
ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள கற்பானைக் குளப்பகுதியில் தரம் 8 ம் ஆண்டில் கல்வி கற்றுவரும் 14 வயது சிறுமி ஒருவரை விபச்சார நடவடிக்கையில் ஈடுபடுத்தி வருவதாக மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து கடந்த 6 ஆம் திகதி இரவு மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.எஸ். எஸ். சமந்த தலைமையிலான புலனாய்வு பிரிவினர் குறித்த தரகரை கையடக்க தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு சூட்சுமமாக பேசி அவரை கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து குறித்த சிறுமியின் சிறிய தந்தையை கைது செய்ததுடன் சிறுமியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
குறித்த சிறுமி கடந்த ஜனவரி மாதம் பூப்படைந்துள்ளதாகவும் அவரை சிறிய தந்தை பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளதுடன் சிறுமியை அவரது வீட்டில் வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், விபச்சார தரகர் மற்றும் ஆசிரியர் ஒருவர் மற்றும் ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட 7 பேர் இந்த பாலியல் துஸ்பிரயோக விபச்சார நடவடிக்கையில் இந்த சிறுமியை ஈடுபடுத்தியுள்ளதாகவும், இந்த விபச்சாரத்திற்கு ஒருவருக்கு தலா 20 ஆயிரம் ரூபா பணம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 விபச்சார விடுதிகள் இயங்கி வரும் நிலையில், தலைநகரில் இரண்டு விபச்சார விடுதிகள் இயங்கி வருவதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
இச் சம்பவத்தில் 38 வயதுடைய குமார் என்றழைக்கப்படும் சிறிய தந்தை , மற்றும் 35 ம் கொலனி வெல்லாவெளி பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான தரகர் ஆகிய இருவரையும் கைது செய்து ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் நேற்று (07) ஆஜர்படுத்தியபோது இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இதேவேளை சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர் ஒருவர் உட்பட 5 பேரையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
(மட்டக்களப்பு நிருபர் சரவணன்)