"கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை ஜனாதிபதியாவது தமிழர்களுக்கு நன்மையே" - விக்னேஸ்வரனின் கருத்து ஏற்புடையதா.?

kinniya

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியாக சத்திய பிரமாணம் செய்துக் கொள்ளும் பட்சத்தில் அது தமிழர்களுக்கு நன்மையே தவிர தீமை கிடையாது என வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள சி.வி.விக்னேஸ்வரன், தமிழர்கள் அச்சப்படுகின்ற அளவிற்கு அவர் நடந்துக்கொள்ள மாட்டார் என கூறியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வருவதை இந்தியா மற்றும் அமெரிக்கா விரும்பாது என விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறு கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதிவரும் பட்சத்தில், இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தமிழ் மக்களுக்கு சார்பாக நடவடிக்கை எடுக்க வேண்டியதொரு நிலைக்குத் தள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவிற்கும், கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் கள்ள உறவு இருப்பதாக கூறப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டினார்.

அவ்வாறு இருந்தாலும், அமெரிக்கா கோட்டாபய ராஜபக்ஷவை வழிநடத்த பார்க்கும் என கூறியுள்ள அவர், அது தமிழ் மக்களுக்கு சார்பாகவே அமையும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கான செல்வாக்கு அமெரிக்காவில் அதிகரித்து காணப்படுகின்றமையினால், அது தமிழர்களுக்கு சாதகமாகவே காணப்படும் என சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதில்

பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பில் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் தெரிவிக்கின்றார்.

சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்து தொடர்பில் பி.பி.சி தமிழ் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் வன்னி நிலப்பரப்பில் வாழ்ந்த அனைத்து மக்களும் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்திருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வெள்ளை வேன்களில் பல கடத்தல்கள் இடம்பெற்றதாகவும், புலனாய்வாளர்கள் என்ற போர்வையில் வருகைத் தந்தவர்கள் தமிழர்களின் வாழ்க்கையை சீர்குலைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், புலம்பெயர்ந்த தமிழர்கள் மீண்டும் நாட்டிற்கு வருகைத் தந்த சந்தர்ப்பங்களில் அவர்களின் தகவல்களை திரட்டி, அவர்களின் வீடுகளுக்கு சென்று அச்சுறுத்தல்களை விடுத்ததாகவும் அவர் கூறினார்.

கிறிஸ் பூதம் என்ற பெயரிலான அச்சுறுத்தல்கள், காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் காணாமல் போன போராளிகளின் மனைவிமார் கொழும்பிற்கு அழைத்து செல்லப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், அரச படைகள் தமிழர்களின் காணிகளை கையகப்படுத்தி வைத்துள்ளமை, மக்களுக்கு பாரிய பிரச்சினையாக அமைந்திருந்ததாகவும் எஸ்.சிவமோகன் கூறினார்.

வன்னியிலுள்ள மக்கள் எதிர்நோக்கி பிரச்சினைகள் தொடர்பில், சி.வி.விக்னேஸ்வரனுக்கு தெரியாது என கூறிய அவர், சி.வி.விக்னேஸ்வரன் கொழும்பில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருந்ததாகவும் சுட்டிக்காட்டினார்.

வன்னியின் வரலாறு தெரியாத ஒருவர் வன்னி மக்கள் தொடர்பில் கருத்துரைக்க வேண்டிய அவசியம் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் குறிப்பிட்டிருந்தார்.

  • ஓய்வு பெற்ற இரண்டே மாதத்தில் ஜனாதிபதி வேட்பாளரான இலங்கை முன்னாள் ராணுவ தளபதி
  • இலங்கையில் தற்கொலை செய்யும் இடமாக மாறியுள்ள வரலாற்று அடையாளம்

சிவமோகனின் குற்றச்சாட்டுக்கள், பொதுஜன பெரமுன பதில்

தமிழ் மக்களுக்கு நன்மை ஏற்படும் வகையிலான எந்தவொரு பணிகளையும் வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல்வாதிகள் செய்ததில்லை எனவும், மாறாக மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி தமிழர்களை வாக்குகளை சுவீகரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவிக்கின்றது.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்த அந்த கட்சியின் உறுப்பினர் டலஸ் அழகபெரும இதனைக் குறிப்பிட்டார்.

இந்தியாவின் தலையீட்டில் தமிழர்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் ஸ்தாபிக்கப்பட்ட மாகாண சபைகளில், வட மாகாணத்திற்கான தேர்தல் மாகாண சபை ஸ்தாபிக்கப்பட்டு 26 வருடங்களின் பின்னரே நடைபெற்றதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெறும் என்பதனை அறிந்திருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனநாயகத்தை ஸ்தாபிப்பதற்காக வட மாகாணத் தேர்தலை நடத்தியிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆனால் தமிழர்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கருத்துரைக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.

தமிழர்களின் அதிகாரத்தை பெற்றுக் கொடுப்பதற்காகவே பணியாற்ற வேண்டுமே தவிர, தேர்தலை இலக்காக கொண்டு பணியாற்றக் கூடாது என டலஸ் அழகபெரும தமிழ் அரசியல்வாதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.