ராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகளை விடுவிக்க ஆளுநரின் முடிவு என்ன?

ராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகளை விடுவிக்க ஆளுநரின் முடிவு என்ன?

ராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகளை விடுவிக்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் தீர்க்கமான முடிவை எதிர்பார்த்து காத்திருப்பதாக தமிழக அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று (22) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஏழு பேரையும் விடுதலை செய்யுமாறு தமிழக அரசு அளுநரிடம் கோரியுள்ள நிலையில் இன்று வரை அதற்கான பதில் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இது குறித்து விரைவாக பதிலளிக்குமாறு ஆளுநரை வற்புறுத்த அரசியல் சாசனத்தில் இடமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் சிறைத் தண்டனை அனுபவிக்கும் எழுவரையும் விடுதலை செய்வார் என நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக ஆளுநர் முடிவு செய்யலாம் என இந்த உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்த நிலையில் ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழக அமைச்சரவையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டு அது ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால் பல மாதங்கள் கடந்த நிலையிலும் அவர்கள் 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து இன்றுவரை தமிழக ஆளுநர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் அவரது மனைவி நளினி உள்ளிட்ட 7 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நளினி வேலூரில் உள்ள பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.