கிண்ணியாவின் முதன்மையாளர்கள் - 21 முதல் வலயக் கல்விப் பணிப்பாளர் ஜனாப்.எம்.கே.எம்.ஹனிபா

கிண்ணியாவின் முதன்மையாளர்கள் - 21 முதல் வலயக் கல்விப் பணிப்பாளர் ஜனாப்.எம்.கே.எம்.ஹனிபா

கிண்ணியாவின் முதல் வலயக் கல்விப் பணிப்பாளர் ஜனாப்.எம்.கே.எம்.ஹனிபா அவர்களாவார். மர்ஹூம்களான முகம்மது கான் - ஹமீதா உம்மா தம்பதிகளின் புதல்வராக 1945.04.10 ஆம் திகதி திருகோணமலை மாவட்ட இறக்கக்கண்டியில் இவர் பிறந்தார். கிண்ணியாவைச் சேர்ந்த இவரது பெற்றோர் 2ஆம் உலக மகா யுத்த காலத்தில் பாதுகாப்புக் கருதி இறக்கக்கண்டிக்கு இடம்பெயர்ந்திருந்தனர்.

தனது ஆரம்பக் கல்வியை இறக்கக்கண்டி அல்ஹம்ரா வித்தியாலயத்தில் கற்ற இவர் கல்லெல்ல முஸ்லிம் வித்தியாலயம், திருகோணமலை புனிதவளனார் மகா வித்தியாலயம், திருகோணமலை இந்துக் கல்லூரி ஆகியவற்றிலும் கற்றுள்ளார்.

08.01.1970இல் மாணவ ஆசிரியராக நியமனம் பெற்றார். 1971/72 காலப் பகுதியில் பலாலி ஆசிரிய கலாசாலையில் வர்த்தகத் துறையில் பயிற்சி பெற்றார். பின்னர் வர்த்தக உயர் தேசிய டிப்ளோமாப் பட்டம் பெற்றார்.  1986 இல் வர்த்தகத் துறையில் விசேட பட்டம் பெற்றார்.

இலங்கை அதிபர் சேவைப் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த இவர் கிண்ணியா கோட்ட வர்த்தக ஆசிரிய ஆலோசகராகவும், பிரதி அதிபராகவும் பணியாற்றியுள்ளார். 1995ஆம் ஆண்டு காலப் பகுதியில் இவருக்கு இலங்கை கல்வி நிர்வாக சேவை (SLEAS)கிடைத்தது. இக்காலப் பகுதியில் கிண்ணியா மத்திய கல்லூரியின் அதிபரானார். இவரது காலத்தில் தான் இப்பாடசாலை தேசியப் பாடசாலையானது.

இலங்கையில் 1998ஆம் ஆண்டு வலயக் கல்வி அலுவலக முறை அமுலாக்கத்தின் போது மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளராக இவர் நியமனம் பெற்றார். இதனால் கிண்ணியாவின் முதல் வலயக் கல்விப் பணிப்பாளர் என்ற பெருமையை இவர் பெறுகின்றார்.

அப்போது கிண்ணியாவும் மூதூர் கல்வி வலயத்தின் கீழேயே இருந்தது. இதனால் வெருகல் முதல் முள்ளிப்பொத்தானை வரை 100 க்கும் மேற்பட்ட பாடசாலைகளை பரிபாலிக்க வேண்டிய நிலை இருந்தது.

இவரது காலத்தில் அப்துல் மஜீது வித்தியாலயம், அல் அக்தாப் வித்தியாலயம் உட்பட 8 பாடசாலைகள் புதிதாக ஆரம்பிக்கப்பட்டன. இவரது நிர்வாகம் கண்டிப்பானதாக இருந்ததால் பாடசாலைகள் நேரத்துக்கு ஒழுங்காக இயங்கின. 

வடக்கு கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களப் பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ள இவர் 2002ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 

இந்த வகையில் அமைச்சொன்றின் நிர்வாகப் பதவி வகித்த முதலாமவர் என்ற பெருமையும் இவருக்குண்டு. 2005 இல் ஓய்வு பெற்ற இவர் 2008 வரை ஒப்பந்த அடிப்படையில் இந்தப் பதவியை தொடர்ந்து வகித்துள்ளார்.

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் அரசியலில் பிரவேசித்த வேளையில் அவரது ஆலோசனைக்குழு உறுப்பினர்களுள் ஒருவராகவும் இவர் செயற் பட்டிருக்கின்றார்.

திருமதி சவ்தா உம்மா இவரது வாழ்க்கைத் துணையவியாவார். பாரிஸ் (முன்னாள் SDO), பாயிஸ் (கிண்ணியா விஷன்), ரயீஸ்கான், ஆசுக்கான் ஆகியோர் இவரது புதல்வர்களாவர்.

சற்று சுகவீனமுற்றுள்ள இவரது உடல் ஆரோக்கியத்துக்கு பிரார்த்திப்போம்.

 

தேடல்:

ஏ.ஸீ.எம்.முஸ்இல்