கிண்ணியாவின் முதன்மையாளர்கள் -22 முதல் மாகாணசபை உறுப்பினர் எம்.ஐ.எம்.ஜமால்தீன்

கிண்ணியாவின் முதன்மையாளர்கள் -22 முதல் மாகாணசபை உறுப்பினர் எம்.ஐ.எம்.ஜமால்தீன்

கிண்ணியாவிலிருந்து முதன் முதலாக மாகாணசபை உறுப்பினராகத் தெரிவு செய்யப் பட்டவர் ஜனாப். எம்.ஐ.எம்.ஜமால்தீன் அவர்களாவர். இவர் மர்ஹூம்களான முகம்மது இஸ்மாயில் - செய்யதும்மா தம்பதிகளின் தலைமகனாக 1943.12.09 ஆம் திகதி பெரிய கிண்ணியாவில் பிறந்தார்.

பெரிய கிண்ணியா ஆண்கள் வித்தியாலயத்தில் கல்வி கற்ற இவர் 1963 ஆம் ஆண்டு தமிழ் மொழிப் பாட ஆசிரியராக நியமனம் பெற்றார். பின்னர் ஆங்கில ஆசிரியர் நியமனம் பெற்றதோடு அட்டாளைச்சேனை, பலாலி ஆகிய ஆசிரியர் கலாசாலைகளில் கற்பித்தல் பயிற்சியை நிறைவு செய்தார்.

தனது சொந்த முயற்சியால் ஆங்கில அறிவை வளர்த்துக் கொண்ட இவர் கிண்ணியா அல் அக்ஸா கல்லூரி, கிண்ணியா மத்திய கல்லூரி, குறிஞ்சாக்கேணி அறபா மகா வித்தியாலயம், காக்காமுனை தாருல் உழூம் மகா வித்தியாலயம், கொழும்பு ஹமீத் அல் ஹூசைனி மகா வித்தியாலயம் போன்ற பாடசாலைகளில் ஆங்கில ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார்.

1983 ஆம் ஆண்டு வரை சுமார் 20 வருடங்கள் ஆசிரியர்ப் பணி செய்த இவர் அரசியல் புறக்கணிப்பு காரணமாக ஆசிரியர்த் தொழிலைக் கைவிட்டு மாணிக்கக் கல் வியாபாரத்தில் ஈடுபட்டார். 

1989 காலப்பகுதியில் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து அரசியலிலும் ஈடுபட்டார். இதனால் 1989 ஆம் ஆண்டு இணைந்த வட கிழக்கு மாகாணசபை உறுப்பினராக நியமனம் பெற்றார்.

இந்த வகையில் கிண்ணியாவின் முதலாவது மாகாணசபை உறுப்பினர் என்ற பெருமையை இவர் பெறுகின்றார். 

1990 இல் இந்த மாகாணசபை கலைக்கப்படும் வரை இதன் உறுப்பினராகச் செயற்பட்ட இவர் மாகாண சபையில் நிகழ்த்திய கன்னி உரையில் கிண்ணியா பிரதேச விவசாயத்துறையை அபிவிருத்தி செய்ய மகாவலி கங்கை கிண்ணியா பிரதேசம் ஊடாக திசை திருப்பப் பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

தனது மாகாணசபை அதிகாரங்களைப் பயன்படுத்தி தன்னால் முடியுமான சேவைகளை இவர் செய்துள்ளார்.  அப்போதைய முதலமைச்சர் வரதராஜப் பெருமாளுடன் நெருங்கிய உறவைப் பேணி வந்த இவர் சின்னக் கிண்ணியா நடுப்பள்ளிவாயலுக்கு அவரை அழைத்து வந்து அப்பள்ளிவாயல் புனரமைப்பிற்கு கனிசமான தொகை நிதியை மாகாண சபை பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மூலம் பெற்றுக் கொடுத்தார்.

அப்போது வடக்கு கிழக்கு மாகாணங்களில் இந்திய அமைதி காக்கும் படையினர் நிலை கொண்டிருந்தனர். அவர்களோடு  தொடர்பு பட்ட பிரச்சினைகள் பொது மக்களுக்கு ஏற்படும் போது படை உயர் அதிகாரிகளைச் சந்தித்து அவற்றுக்குத் தீர்வு பெற்றுக் கொடுத்துள்ளார். 

உயர்தரம் கற்ற மாணவர்கள் சிலருக்கு மலேசியாவில் உயர்கல்வி கற்க புலமைப் பரிசில் பெற்றுக் கொடுத்துள்ளார். இன்று அவர்கள் வெளிநாட்டுப் பல்கலைக் கழங்கங்களில் சிரேஷ்ட விரிவுரையாளர்களாகப் பணி புரிகின்றனர்.

பொதுமக்கள் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க கூடுதல் கவனம் செலுத்திய இவர் அரசியல் அதிகாரம் இல்லாத காலத்திலும் அமைச்சுக்கள், திணைக்களங்களுக்கு அவர்களை அழைத்துச் சென்று அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார். 

குறிப்பாக 1990 காலப்பகுதியில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களில் கல்வி கற்ற முஸ்லிம் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாக இருந்தது. இதனால் அப் பல்கலைக் கழகங்களில் கல்வி கற்க முடியாத சூழ்நிலை உருவாகி அப்பல்கலைக் கழகங்களில் இருந்து அவர்கள் இடம்பெயர்ந்தனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட கிண்ணியா, மூதூர் பகுதி மாணவர்கள் வட கிழக்கிற்கு வெளியே உள்ள பல்கலைக் கழகங்களில் கல்வி கற்க ஏற்பாடுகளை இவர் செய்து கொடுத்தார்.

திருமதி பாத்தும்மா இவரது வாழ்க்கைத் துணைவியாவார். மர்ஹூம் அப்துல் பத்தாஹ், சவாஹிரா, முகம்மது அமானுல்லாஹ் (ஆசிரியர்), முகம்மது அன்வருல்லாஹ் ஆகியோர் இவரது பிள்ளைகளாவர்.

பல்வேறு சமூகப் பணிகள் புரிந்த இவர் தற்போது சுகவீனம் உற்ற நிலையில் இருக்கிறார். எனவே, இவரது உடல் நலம் தொடர்பில் நமது பிரார்த்தனைகளில் சேர்த்துக் கொள்வோம்

தேடல்:

ஏ.ஸீ.எம்.முஸ்இல்