15 -15 : எல்பிட்டிய உள்ளூராட்சி சபையை NPP நடத்த முடியுமா?
எல்பிட்டிய பிரதேச சபையின் ஆளும் கட்சியாக செயற்படுவதற்கு தேசிய மக்கள் சக்தி எவ்வித தடைகளையும் சந்திக்காது என முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் NPP வெற்றிபெற்று 15 ஆசனங்களைப் பெற்றதுடன், ஏனைய எதிர்க்கட்சிகள் இணைந்து எஞ்சிய 15 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டன.
NPP யின் பெரும்பான்மை குறித்த கவலைகளை எடுத்துரைத்த மஹிந்த தேசப்பிரிய, தேர்தல் சட்டத்தின் பிரகாரம் NPP 50% பெரும்பான்மையுடன் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளதாகவும் இதனால் தலைவர் மற்றும் பிரதித் தலைவரை நியமிக்க கட்சியின் செயலாளருக்கு அதிகாரம் உள்ளதாகவும் தெரிவித்தார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய, எல்பிட்டிய பிரதேச சபைக்கான தலைவர் மற்றும் உப தலைவர் பெயர்களை NPP செயலாளர் பரிந்துரைப்பார் என அவர் தெரிவித்தார்.
"தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் 50% பெரும்பான்மையை NPP பெற்றுள்ளதால், தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கு வாக்கெடுப்பு தேவையில்லை" என்று மஹிந்த தேசப்பிரிய கூறினார்.
“பிரதேச சபையில் முன்வைக்கப்படும் எந்தவொரு பிரேரணையின் மீதும் வாக்கெடுப்பு நடைபெறும் போது, எதிர்க்கட்சிகள் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தால், தலைவர் தனது வாக்கை ஆதரவாகவோ அல்லது எதிராகவோ தீர்மானிக்கும் வாக்காக பயன்படுத்த முடியும்," என முன்னாள் தேர்தல் ஆணையாளர் மேலும் விளக்கினார்.